பதுளை- செங்கலடி வீதியின் பசறை, 13 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 3.00மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவின் காரணமாக வீதியில் வீழ்ந்துள்ள கற்பாறைகளை அகற்றும் பணி தாமதமாகவே முன்னெடுக்கப்படுவதாக கள ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவிக்கின்றார் .
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
மண் சரிவு அனர்த்தம் காரணமாக வீதியில் வீழ்ந்துள்ள கற்பாறைகளை அகற்றும் போது மேற்புறமாக சரிவடையும் அபாயத்தில் உள்ள பாறைகள் மீண்டும் வீதிக்கு சரியும் அபாயம் நிலவுகிறது.
எனினும் குறித்த பாதையின் வாகனப் போக்குவரத்தை ஒரு வழி தடத்தின் ஊடாக மாத்திரமேனும் நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர், பசறை பிரதேச செயலாளர், பசறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோருடன் இணைந்து தேசிய கட்டிடப் பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகளின் கள ஆய்வில் கிடைக்கும் ஆய்வு முடிவுகளை கருத்திற் கொண்டு தொழிநுட்ப வல்லுனர்களின் ஆலோசனையுடன் கற்பாறைகளை விரைந்து அகற்ற வேண்டும்.
எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சை எழுத இப்பாதை ஊடாக வரும் மாணவர்கள் தடையின்றி பரீட்சையில் பங்குபற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தொடர்ந்து மண் சரிவு அனர்த்த பகுதியில் கற்பாறைகள் கீழ் விழும் அபாயம் நிலவுகிறது. எனவே பாதையை மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.